தளி அருகே டைல்ஸ் கடை உரிமையாளர் அடித்துக்கொலை அண்ணன் வெறிச்செயல்
தேன்கனிக்கோட்டை
தளி அருகே குடும்ப தகராறில் டைல்ஸ் கடை உரிமையாளரை கட்டையால் அடித்துக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
டைல்ஸ் கடைக்காரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 36). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு வேன் வைத்து இருந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இவர் கடந்த 26-ந் தேதி மாலை மது குடித்து விட்டு தனது தாயாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சரக்கு வேனை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டு பவுல்ராஜ் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அதன்பின்னர் அவர் இரவு வெளியே சென்றார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவுல்ராஜ், தனது தாயாைர அழைத்து செல்வது தொடர்பாக தனது அண்ணனான விவசாயி சவுரிராஜன் (44) என்பவருடன் தகராறு செய்தார். அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சவுரிராஜன் அருகில் இருந்த கட்டையால் தம்பி பவுல்ராஜின் தலையில் அடித்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் பவுல்ராஜ் சரிந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து பவுல்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
கைது
இந்த கொலை தொடர்பாக பவுல்ராஜின் மனைவி ரெஜினா புஷ்பா, தளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் பவுல்ராஜை அவருடைய அண்ணன் சவுரிராஜன், எதற்காக பழைய வீட்டிற்கு வந்தாய் என கேட்டு தகராறு செய்ததும், தகராறு முற்றியதில் கட்டையால் அடித்துக்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சவுரிராஜனை போலீசார் கைது செய்தனர்.டைல்ஸ் கடை உரிமையாளர் அடித்துக்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.