கொடைக்கானலில், தென்காசி வாலிபர் கொலை செய்யப்பட்டது எப்படி?; கைதான யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்


கொடைக்கானலில், தென்காசி வாலிபர் கொலை செய்யப்பட்டது எப்படி?; கைதான யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம்
x

கொடைக்கானலில், தென்காசி வாலிபர் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதான யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திண்டுக்கல்

கொடைக்கானலில், தென்காசி வாலிபர் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதான யோகா ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி வாலிபர் கொலை

தென்காசி சக்தி நகரை சேர்ந்தவர் அய்யாதுரை. அவருடைய மகன் சூர்யா (வயது 30). பிலிம் டெக்னாலஜி படித்துள்ள இவர், கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது, கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சூர்யாவை கொலை செய்ததாக அவரது காதலியும், சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் 1-வது தெருவை சேர்ந்த யோகா ஆசிரியையுமான சுவதோ (25) மற்றும் அவருடைய ஆண் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட சுவேதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுற்றுலா வந்தபோது எனக்கும், சூர்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு சூர்யாவின் நடவடிக்கை பிடிக்காததால், அவரை பிரிந்து சென்னைக்கு சென்று விட்டேன். அவர் என்னிடம் பேச முடியாதபடி, சூர்யாவின் செல்போன் எண்ணை 'பிளாக்' செய்து விட்டேன்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலை தேடி கொடைக்கானலுக்கு வந்தேன். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தேன். இதற்கிடையே சூர்யாவின் நம்பரை 'அன் பிளாக்' செய்து, அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதன்பிறகு மீண்டும் எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி, கல்லுக்குழி பகுதியில் உள்ள சூர்யாவின் வீட்டில் இருந்தேன். அப்போது டி.வி. பார்ப்பதில் எனக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சூர்யா என்னை தாக்க முற்பட்டார். இது தொடர்பாக என்னுடைய ஆண் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அதன்பேரில் அங்கு வந்த ஆண் நண்பர்கள் 4 பேர், எங்களுக்கிடையேயான தகராறை விலக்கி விட முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பர்கள், அருகே கிடந்த உருட்டுக்கட்டையால் சூர்யாவை தாக்கினர். மேலும் அவரை கால்களால் மிதித்தனர். இதில் சூர்யா மயங்கி விழுந்தார். இதனால் அங்குள்ள கட்டிலில் அவரை படுக்க வைத்து இருந்தோம்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் கண் விழிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள், கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக என்னையும், என்னுடைய ஆண் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு சுவேதா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story