திண்டுக்கல்லில் நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர் கைது
திண்டுக்கல்லில் நடன கலைஞரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன் மோகன் பிரகாஷ் (வயது 24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நடன பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இன்று நடன பயிற்சி மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டது.
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வௌ்ளத்தில் கீழே சாய்ந்தார். இதையடுத்து மோகன்பிரகாஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோகன்பிரகாஷ், கக்கன்நகரை சேர்ந்த தமிழ்செல்வனுடன் (20) சேர்ந்து நடன பயிற்சி மையம் தொடங்கி உள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் தமிழ்செல்வன் தனது பங்கு தொகையை கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் தமிழ்செல்வன் தனது நண்பர்களான சங்கர் கார்த்திக் (22), தமிழரசன் (22) மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.