விவசாயி கொலை; அண்ணன் மகன்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
விவசாயி கொலை சம்பவத்தில் அவரது அண்ணன் மகன்கள் உள்பட 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 60). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு, அவரது கிணற்றில் இறந்து கிடந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அன்பழகனிடம் அவருடைய அண்ணன் மாரிக்கண்ணுவின் மகன்கள் பிரகாஷ், இளவரசன் மற்றும் ராஜேந்திரன் மகன் சந்திரசேகரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தள்ளு, முள்ளு ஏற்பட்டதில் அன்பழகன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும், தள்ளு, முள்ளுவில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறி பிரகாஷ், இளவரசன், சந்திரசேகரன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிணற்றில் தள்ளிவிட்டதில்...
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அன்பழகனின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அன்பழகனின் மனைவி செல்வகுமாரி பாடாலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது கணவர் பிரச்சினைக்குரிய இடத்தில் தொகுப்பு வீடு கட்டி வருவதாகவும், அந்த வீட்டில் தங்களுக்கும் பங்கு உள்ளதாகவும் கூறி அவருடைய அண்ணன் மாரிக்கண்ணுவின் மகன்களான பிரகாஷ், இளவரசன் ஆகியோர் அடிக்கடி வந்து அன்பழகனிடம் தகராறு செய்து வந்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக எங்கள் குடும்பத்துக்கும், அவர்களது குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வயலில் இருந்த அன்பழகனிடம் பிரகாஷ், இளவரசன் மற்றும் ராஜேந்திரன் மகன் சந்திரசேகரன் ஆகியோர் தகராறு செய்து கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டி அன்பழகனை கிணற்றில் தள்ளி விட்டதால் அவர் உயிரிழந்தார். இதனை எனது மகன் நேரில் பார்த்து விட்டு என்னிடம் வந்து கூறினார்.
கொலை வழக்கு
எனவே எனது கணவரை கொலை செய்த பிரகாஷ், இளவரசன், சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் அவர்கள் போலீசார் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.