ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் முரளி (வயது 19). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள் முரளியை காரில் அழைத்து சென்றனர். மது குடிப்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்கள் அலசநத்தம் சாலையில் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் உள்ள தனியார் லே-அவுட்டிற்கு சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்து வைத்த அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து முரளியை சரமாரியாக வெட்டினார்கள்.
வெட்டிக்கொலை
இதில் கழுத்து உள்பட உடலில் 13 இடங்களில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் முரளி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் உடன் வந்த 2 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முரளி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-
பழிக்குப்பழியா?
ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் உதயகுமார் (32). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 28.2.2022 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தற்போது கொலையாகி உள்ள முரளி, முதல் குற்றவாளியாக போலீசாரால் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முரளி, ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் தான் அவரை, அந்த நபர்கள் வெட்டிக்கொலை செய்துள்ளனர். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.