நத்தம் அருகே மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை; கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு


நத்தம் அருகே மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை; கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு
x

நத்தம் அருகே மெக்கானிக் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

நத்தம் அருகே மெக்கானிக் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பொதுமக்கள் அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியை சேர்ந்தவர் தங்கராஜா (வயது 41). டி.வி. மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இந்தநிலையில் தங்கராஜாவும், அதே ஊரை சேர்ந்த உதயகுமார் (37) என்பவரும் இன்று மதியம் 2 மணி அளவில் அங்குள்ள கடை அருகில் நின்று பேசிக்‍கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனை பார்த்த பொதுமக்கள், அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும் 2 பேரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது உதயகுமார், தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தங்கராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

கொலையாளி சாவு

உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதயகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்து நிலைகுலைந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமாரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் சூப்பிரண்டு அருண்கபிலன் மற்றும் நத்தம் போலீசார் லிங்கவாடிக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை சம்பவம் குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பதற்றம்-போலீஸ் குவிப்பு

அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் லிங்கவாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், பதற்றம் நிலவுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் லிங்கவாடியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமம் முழுவதும் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தங்கராஜாவை உதயகுமார் கொலை செய்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

முன்விரோதம் காரணமாக அவரை உதயகுமார் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் உதயகுமாரை தாக்கிய நபர்கள் யார், யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


Related Tags :
Next Story