முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு


முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
x

வேலூர் மத்திய ஜெயிலில் பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

வேலூர்

வேலூர் மத்திய ஜெயிலில் பரோல் வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

தொடர் உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

பல ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று முருகன் ஜெயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என்று ஜெயில் நிர்வாகம் மறுத்து விட்டது. அதனால் முருகன் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து விட்டு பரோல் வழங்கக்கோரி கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முருகனுக்கு உடல் நலக்குறைவு

ஜெயிலில் வழங்கப்படும் உணவுகளை முருகன் தவிர்த்து பழங்களை மட்டும் உட்கொண்டு வருகிறார். ஜெயில் அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முருகனுக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அவரின் உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.


Next Story