திருப்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
அனுப்பர்பாளையம்:
வைகாசி விசாக விழாவையொட்டி திருப்பூர் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் நேற்று வைகாசி விசாக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள கந்த பெருமாள் கோவிலில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் வாவிபாளையம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் உள்பட சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
----