முருங்கத்தொழுவு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி


முருங்கத்தொழுவு  ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
x

முருங்கத்தொழுவு ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனா்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட மைலாடி காந்தி நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மைலாடி காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்னிமலை - அறச்சலூர் ரோட்டில் உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சி மன்ற அலுவலகத்ைத முற்றுகையிடுவதற்காக வந்தனர். இதுபற்றி அறிந்தும் ஊராட்சி செயலாளர் நாகராஜன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் காவிரி ஆற்று குடிநீரை தவிர கிணற்று நீரோ, அல்லது ஆழ்குழாய் கிணறுகளோ எதுவும் இல்லை. காவிரி ஆற்று குடிநீரை நம்பித்தான் இருக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. எங்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும்,' என்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் வெளியூரில் இருந்த ஊராட்சி தலைவர் பிரபாவதி, பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், 'குடிநீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,' என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story