நோய்களை குணப்படுத்தும் தன்மை இசைக்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது
நோய்களை குணப்படுத்தும் தன்மை இசைக்கு உள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நோய்களை குணப்படுத்தும் தன்மை இசைக்கு உள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இசைக்கு மருத்துவ குணம்
திருவாரூர் எனக்கு பிடித்தமான ஊர். ஆன்மிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆகும். திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனையில் கலந்து கொண்ட நான் இந்த ஊரில் நடக்கும் மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்று இருப்பதை பெரும் பேராக கருதுகிறேன்.
கர்நாடக இசைக்கும், தமிழ் இசைக்கும் மருத்துவ குணம் உள்ளது என்பதை பல இடங்களில் நிருபித்துள்ளனர். நாம் விளக்கு ஏற்றவே சிரமப்படுகிறோம். ஆனால் மும்மூர்த்திகள் தங்கள் பாடல்களால் விளக்கேற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தியாகராஜர் சாமிகள் பிலகரி ராகம் பாடி இறந்தவரை எழுப்பினார். அது தான் டாக்டர். சங்கீதம், ராகங்கள் எந்த அளவிற்கு சிகிச்சை முறைக்கு பயன் அளிக்கிறது என்று உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
உயிர் வளர்க்கும் தொழிலை கற்றுக்கொடுத்தது
பயிர் வளர்க்கும் தஞ்சை எனக்கு உயிர் வளர்க்கும் தொழிலை கற்று கொடுத்தது. மருத்துவம் பார்க்க சாமானியர்கள் சிரமம்படுகிறார்கள் என்பதால் பிரதமர் மோடி மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தபோது ஒரு கோடி வணக்கத்தை தெரிவித்தேன்.
யோகக்கலையை பிரதமர் மோடி உலகறிய செய்தார். மனதின் குரல் என்கிற நிகழ்ச்சியின் மூலம் தொலைந்து போன ரேடியோவை மீட்டெடுத்தார். வந்தே பாரத் ெரயில் மூலம் ெரயில் பயணத்தையும் மீட்டெடுத்துள்ளார்.
நோய்களை குணப்படுத்தும் தன்மை
அந்த வகையில் நாம் நமது இசை பாரம்பரியத்தையும் மீட்க வேண்டும். இசையைப் பொறுத்தவரை மொழி அரசியலை புகுத்தக் கூடாது. கீர்த்தனைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதன் தன்மைகளை மட்டுமே நாம் உணர வேண்டும். பொதுவாக இசைக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
உதாரணமாக குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்கும்போது, அதில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் ஓசை தான் குழந்தைகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில் கல்யாணி ராகம் இசைத்தால் விரைவில் நோயாளிகள் குணம் அடைகிறார்கள், சஹானா ராகம் மனச்சோர்வு நீங்கவும், காச நோயை குணப்படுத்த ஜாய் ஜல வந்தி ராகம், தலைவலியை போக்க சாரங்க தர்பூரி, பசியின்மைக்கு தீபக், பக்கவாதம் குணமாக பைரவி ராகம் இசைக்க வேண்டும் என்பன போன்றவை ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் தமிழ்
எனது பெயரில் மட்டும் தமிழ் இல்லை. எனது உயிரிலும் தமிழ் கலந்து இருக்கிறது. காஞ்சி மகா பெரியவரை பார்க்க நானும் எனது கணவரும் சென்றபோது 50 பேர் இருந்த கூட்டத்தில் அவர் என்னை அழைத்து கையில் மாங்கனி ஒன்றை கொடுத்தார். அந்த மாங்கனி தான் இன்று இரு மாநில கவர்னராக எனது கைகளில் பரிணமிக்கிறது என்று கருதுகிறேன்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், இசை விழாவில் பங்கேற்கும் பாடகர்களும் ஒவ்வொரு ராகத்திற்கும் என்ன தன்மை உள்ளது என்பதை ஆராய்ச்சியாக மேற்கொண்டு அதனை ஆவணப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயந்தி விழாக்குழு தலைவரும், தினமலர் ஆசிரியருமான ஆர்.ராமசுப்பு, புரவலர் டெக்கான் மூர்த்தி, பொதுச்செயலாளர் தியாகபாரி, நிர்வாக ஆலோசகர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திகேயன் நன்றி கூறினார்.