கயத்தாறில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்
கயத்தாறில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு போலீஸ் நிலையத்தை நேற்று முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்கா
கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தை சேர்ந்த மானங்காத்தான் கிராமத்தில் முஸ்லிம்கள் அரசு புறம் போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காம்பவுண்டு சுவருடன் கூடிய தர்கா கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தற்போது அந்த தர்காவில் தொழுகை செய்வதற்காக அந்த இடத்தை முஸ்லிம்கள் துப்புரவு செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று அதிகாரிகள் சென்று, அந்த பகுதியை பயன்படுத்த கூடாது, தொழுகை நடத்த அனுமதியில்லை என கூறியதாகவும், துப்புரவு பணி மேற்கொள்ள தடை விதித்தனராம்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கம் போல் தர்க்காவை பயன்படுத்தவும், பக்ரீத் தொழுகை நடத்த இடையூறு செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கயத்தாறு போலீஸ் நிலையத்தை திடீரென்று முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, மானங்காத்தான் ஜமாத் தலைவர் அப்துல் காதர், செயலாளர் சாகுல் ஹமீது, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அஸ்மத்உசேன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழுகைக்கு அனுமதி
இந்த பேச்சுவார்த்தையில் வழக்கம் போல் அந்தபகுதியில் அமைதியாக பக்ரீத் தொழுகை நடத்தி கொள்ளலாம் என முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து முஸ்லிம்கள் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்த தர்கா பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.