2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்


2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் -  கமல்ஹாசன்
x

2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வெற்றி பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். இதில், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்து செல்லவேண்டிய களப்பணிகள் குறித்து கமல்ஹாசன் விரிவாக பேசினார். சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்க விரும்புவதாகவும், அந்த சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடலை விரைவுபடுத்தவும் நிர்வாகிகளை கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மாநில, மண்டல, மாவட்ட பொறுப்புகள் தொடங்கி பூத் கமிட்டி வரையிலான பொறுப்புகள் அனைத்தும் நியமிக்கப்படுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைக்கவேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இனி கூடும்போது, மேகதாது அணை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், மாற்று கருத்து கொண்டோரின் டுவிட்டர் பக்கங்களை முடக்க முற்படும் மத்திய அரசை கண்டிக்கிறோம்.

தமிழகமானது "மாநில கல்வி கொள்கையை" வரையறுப்பதற்கான முன்னெடுப்புகள் செய்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழ் மொழியின் தொன்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கொள்கையை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

இந்த முக்கிய தீர்மானங்கள் உட்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story