தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.
ஊட்டி,
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.
குழு கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-
வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாதந்தோறும் ஆர்.டி.ஓ. தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனித்துறை ஆட்சியர் மூலம் 18 வயதிற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அரசு திட்டங்கள்
அத்துடன் பள்ளி கல்வித்துறை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கவும், விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களை செல்போன் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை டாக்டர்கள் சரிபார்த்து விரைவில் முடிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.