கல்பட்டு கிராமத்தில் உள்ளமுத்தாலவாழியம்மன் கோவில் தேரோட்டம்
கல்பட்டு கிராமத்தில் உள்ள முத்தாலவாழியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாலவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் வீதியுலா காட்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலவாழியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இத்தேர், கல்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்பட்டு, நத்தமேடு, சிறுவாக்கூர் ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.