முத்தாலம்மன் கோவில் திருவிழா
வேடசந்தூர் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு கழுகு மரம் ஏறினர்.
வேடசந்தூர் அருகே கோவிலூரில் பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன், முனியப்பசுவாமி, கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி கடந்த 10-ந்தேதி அம்மன் கரகம் பாவித்து மயிலாட்டம், காளை ஆட்டம், வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அக்னிசட்டி எடுத்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து குதிரை அழைத்து வரப்பட்டு கோவில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் கோவில் முன்பு சுமார் 50 அடி உயரமுள்ள கழுகு மரத்தின் மீது இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினர். அப்போது அங்கு சுற்றி இருந்த பார்வையாளர்கள் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதனால் இளைஞர்கள் கழுகு மரத்தில் ஏற முடியாமல் கீழே விழுந்தனர். அதில் சுமார் 3 மணி நேரம் போராடி சிவக்குமார் என்பவர் கழுகு மரத்தில் ஏறி, உச்சியில் மஞ்சள் துணியில் கட்டி வைத்திருந்த ரொக்கப்பரிசை எடுத்தார். அவரை இளைஞர்கள் தோளில் தூக்கி வைத்து சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனையடுத்து முத்தாலம்மன் கோவில் முன்பு படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கரகம் பூஞ்சோலை கொண்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.