குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதியுலா நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் ெசய்தனர்.
பார்வதி கோலம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசுரசம்கார விழா வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்சுவரர் கோவில் கடற்கரையில் நடக்கிறது.
விழா நாட்களில் முத்தாரம்மன் வெவ்வேறு கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரண்டிரு்து அம்மனை தரிசனம் செய்தனர்.
காவடி திருவீதி வலம்
நான்காம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு காவடி திருவீதி வலம் வருதல் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.