சட்ட திருத்த மசோதா நிறைவேறிவிட்டால் மின்சாரத்துறை தனியாருக்கு சென்றுவிடும்- கோபியில் முத்தரசன் பேட்டி
மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேறிவிட்டால் மின்சாரத்துைற தனியாருக்கு சென்றுவிடும் என்று கோபியில் முத்தரசன் கூறினார்.
கடத்தூர்
மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேறிவிட்டால் மின்சாரத்துைற தனியாருக்கு சென்றுவிடும் என்று கோபியில் முத்தரசன் கூறினார்.
ஜனநாயக விரோத போக்கு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனைத்து மாநிலங்களிலும் தானே ஆளவேண்டும் என்ற ஜனநாயக விரோத போக்கில் செல்கிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜ.க.விலிருந்து விலகி காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தற்போது நிதிஷ்குமார் ஆட்சி அமைத்துள்ளார். இது ஒரு தொடக்கம் தான் முடிவல்ல.
அக்னிபாத் திட்டம்
இந்திய ராணுவம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசுக்கு கட்டுப்பட்டது. இவர்களை ஆர்.எஸ்.எஸ். ஆக மாற்றுவது தான் அக்னிபாத் திட்டம்.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கிறது. மக்கள் இதனை தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
மாபெரும் போராட்டம்
வருகிற 30-ந் தேதி மருந்து மாத்திரை விலை உயர்வுக்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராகவும் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும்.
இலவச மின்சாரம் என்பது நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிர்ப்பலி கொடுத்து பெறப்பட்ட உரிமை. மின்சார திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மின்சாரத்துறை தனியாருக்கு சென்றுவிடும். அதன்பின்னர் அவர்கள் விருப்பம் போல் கட்டணத்தை உயர்த்துவார்கள். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது நடைபெறும் பா.ஜ.க. அரசு மக்களைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். விரைவில் பொதுமக்கள் இவர்களுக்கு எதிராக போராடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.சுப்பராயன் உடன் இருந்தார்.