எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டம்-திருச்சியில் முத்தரசன் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டம்-திருச்சியில் முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 April 2023 1:07 AM IST (Updated: 1 April 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி

ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் மாநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருச்சி பெரியமிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் தான் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் குறைந்தபட்ச ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக வேலையின்மை அல்லது வேலையிழப்பு என்ற அடிப்படையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அது நடைபெறவில்லை. மத்திய-மாநில அரசுகள் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் ஏப்ரல் 2-ந் தேதி வரை விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. பிரசாரத்தின் நிறைவு நிகழ்வாக திருச்சியில் 2-ந் தேதி மாநில மாநாடு நடக்கிறது.

ராகுல்காந்தி மீதான அடக்குமுறை

பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை ஒரு புதிய பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்துள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்கு மிகுந்த விசுவாசியாக மோடி செயல்படுகிறார். அதானி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கும் சம்பவம் இந்தியாவில் தான் நடக்கிறது.

அதானி கடன்களை மத்திய அரசு எப்படி தள்ளுபடி செய்கிறதோ, அதேபோல் மாணவர்களின் கல்வி கடனையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஒரேநாடு, ஒரே கட்சி என்ற சர்வாதிகார போக்கை கையாளும்வகையில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க திட்டமிட்டு ராகுல்காந்தி மீதான அடக்குமுறையை முன்னெடுத்துள்ளது.

கொள்கைக்கான கூட்டணி

பா.ஜ.க.வை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். அ.தி.மு.க.வை அடிப்படையாக கொண்டு தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முயற்சித்து வருகிறது. அதற்கு இடம் கொடுத்ததும் அ.தி.மு.க. தான். பா.ஜ.க. சொல்வதை அ.தி.மு.க. செய்வதால் அவர்கள் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆனால் எங்களுடைய கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. இப்போது எந்த நிலையில் இருக்கிறமோ, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story