முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சங்கராபுரம் அருகே முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் பாரதம் படித்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காத்தவராயன், ஆரியமாலா திருமணம், பால் குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைத்தல், கழுமரம் ஏறுதல், காளி கோட்டை இடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் பாவளம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.