முத்து மாரியம்மன் கோவில் திருவிழா


முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 22 May 2023 3:45 AM IST (Updated: 22 May 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் திருவிழா

கோத்தகிரி அருகே குயின்சோலை பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெற்றது.

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மேள தாளங்களுடன் பக்தர்கள் பறவை காவடி, கத்திக்காவடி எடுத்தும், லாரிகளில் தொங்கியவாறு பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

தீ மிதித்தனர்

தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தார்.

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாவிளக்கு பூஜை, தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story