முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை கிரிவல தேரோட்டம்


முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை கிரிவல தேரோட்டம்
x

வள்ளியூர் சாமியார் பொத்தை முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையை முன்னிட்டு கிரிவல தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பொதிகை மலைத்தொடர் பொத்தை மலையடிவாரத்தில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீவன் முக்தர் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி ஆவார். முத்துகிருஷ்ண சுவாமி, அகத்தியரின் அம்ச அவதாரமாக கூறப்படுகிறது. பல அரிய அற்புத செயல்களை செய்து வந்த இவர் 1913-ம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று ஜீவசமாதி அடைந்தார். அவர் ஜீவசமாதி அடைந்த சாமியார்பொத்தை ஸ்ரீபுரத்தில் மகாமேரு மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை இந்த ஆண்டு 109-வது ஆண்டாக கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலையில் மகாமேரு மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக, அலங்கார தீபாராதனை பூஜையும், பஜனை பாடல்களும் நடக்கிறது. இரவில் முத்துகிருஷ்ணா சித்ரகூடத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

5-ம் திருவிழாவான நேற்று கிரிவல தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலையடிவார வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் தேரில் முத்துகிருஷ்ணசுவாமி எழுந்தருள மாதாஜி வித்தம்மா தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பக்தர்களின் `அரோகரா' கோஷத்துடன் தேரானது சூட்டுபொத்தையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 5 கிலோமீட்டர் தூரத்திற்கான கிரிவல பாதையில் வலம் வந்து காலை 10.10 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. இதில், தமிழக சபாநாயகர் அப்பாவு, வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மகாமேரு மண்டபத்தில் வைத்து குரு பூஜை விழா நடக்கிறது. நாளை மறுநாள் (6-ந் தேதி) திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சூட்டு பொத்தை மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட இருக்கிறது. 7-ந் தேதி குரு ஜெயந்தி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story