புத்தந்தூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


புத்தந்தூர்  முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

புத்தந்தூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 31-ந் தேதி அம்மனுக்கு உள் காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தினசரி, சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. மேலும் நேற்று காத்தவராயன்-ஆரியமாலா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தீ மிதி திருவிழா

தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை வந்தடைந்ததும், தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் புத்தந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story