14¼ பவுன் நகை, ரூ.2¼ லட்சம் திருட்டு
முத்தூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 14¼ பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பர்னிச்சர் கடை
திருப்பூர் மாவட்டம் முத்தூர் - சின்னமுத்தூர் சாலை பெருமாள்புதூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 69) விவசாயி. இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி.
இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டனர்.
பின்னர் மாலையில் அவர்கள் தங்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மற்றும் வீட்டின் முன்புற மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள், பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்து இருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம், மாங்கல்யம், தங்க காசு என மொத்தம் 14¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள்
இதுகுறித்து பழனிச்சாமி வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் திருட்டு நடந்த இடத்திற்கு காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.