கவர்னர் மாளிகை 29-ந் தேதி முற்றுகை
அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசிவரும் தமிழக கவர்னரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று திருப்பூரில் சுப்பராயன் எம்.பி. கூறினார்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் திருப்பூர் தொகுதி சுப்பராயன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பனியன் தொழில்
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 8 ஆண்டு காலமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள 23 பஞ்சாலைகள் மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அதனை அரசே கொள்முதல் செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரி விலக்கு
கோவை, திருப்பூர் உள்ளிட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில் நகரங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முழுமையான ஜி.எஸ்.டி. வரி விலக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய அரசு நிதியிலும் ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய திருப்பூர் மாவட்டத்தின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திருப்பூர் மூலம் பெறும் வருவாயில் சில சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிறப்பு தகுதியின் அடிப்படையில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
முற்றுகை போராட்டம்
மேலும் தமிழக கவர்னர் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் போல் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ வேண்டும் என்று கூறாமல் சனாதன தர்மத்தின்படி வாழ வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வருகிறார்.
எனவே அவர் தனது பொறுப்பை உணர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.