அதிமுக உறுதியாக இணைய வேண்டும் என்பது தான் என் விருப்பம் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி


அதிமுக உறுதியாக இணைய வேண்டும் என்பது தான் என் விருப்பம் - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
x

பாவத்தை எல்லாம் அவர்கள் செய்து விட்டு இன்று மற்றவர் மீது பழி போடுகிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டப்பேரவை முடிந்த பிறகு முதல்-அமைச்சரை மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது குற்றம் சாட்டினார். இந்த குற்றச் சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பதிலளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் 1 மணி நேரம் பேசியதாக கூறிய பழனிசாமிக்கு என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டு உள்ளனர். முதல்-அமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார். நிரூபிக்க வில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா?" என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

அதிமுகவில் விரும்பத்தகாத செயல்களை யார் செய்தார்கள் என தொண்டர்களுக்கு தெரியும். பாவத்தை எல்லாம் அவர்கள் செய்து விட்டு இன்று மற்றவர் மீது பழி போடுகிறார்கள். அதிமுக உறுதியாக இணைய வேண்டும் என்பது தான் என் விருப்பம்.தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும்; தொண்டர்களை பற்றி எனக்கு தெரியும் என்றார்.


Next Story