ஓடும் லாரியில் இருந்து 4 மதுபான பெட்டிகளை கடத்திய மர்ம ஆசாமிகள்
கந்தர்வகோட்டையில் ஓடும் லாரியில் இருந்து 4 மதுபான பெட்டிகளை மர்ம ஆசாமிகள் காரில் கடத்தி சென்றனர்.
மதுபான பெட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து டாஸ்மார்க் கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த லாரியை பின் தொடர்ந்து ஒரு காரில் வந்தனர்.
அப்போது வேகத்தடை அருகே லாரி சென்று கொண்டிருந்த போது மர்ம ஆசாமி ஒருவர் லாரியில் ஏறியுள்ளார்.
காரில் கடத்தல்
பின்னர் லாரியில் போடப்பட்டிருந்த தார்ப்பாய் மற்றும் கயிற்றை அறுத்து லாரியில் இருந்த 5 மதுபான பெட்டிகளை காரில் கடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த மது பாட்டில்கள் சிதறி விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதனால் பீதியடைந்த மர்ம ஆசாமிகள் காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
சினிமா பாணியில் ஓடும் லாரியில் இருந்து 4 மதுபான பெட்டிகளை மர்ம ஆசாமிகள் காரில் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.