மாயமான சிறுவன் மீட்பு


மாயமான சிறுவன் மீட்பு
x

மாயமான சிறுவன் மீட்கப்பட்டான்.

திருச்சி

சமயபுரம்:

ஸ்ரீரங்கம் இ.பி. ரோட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராகவன்(வயது 3). முருகனின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முருகன் வேறொரு திருமணம் செய்து கொண்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார். இதையடுத்து ராகவன் அவனது பாட்டி சம்பூர்ணம் என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே ராகவன் விளையாட சென்றபோது காணாமல் போய்விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பூர்ணம் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சிறுவனை தேடி வந்தனர். மேலும், சிறுவனின் புகைப்படத்தை திருச்சி மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அந்த சிறுவன் சமயபுரம் புது பஸ் நிலையம் அருகே தனியாக நின்று கொண்டு இருந்ததை அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார், அவனை சமயபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் சிறுவனை ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த சிறுவனை ஒரு பெண் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் யார்? எதற்காக அழைத்து சென்றார்? என்று ஸ்ரீரங்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story