தையல் தொழிலாளி மர்ம சாவு


தையல் தொழிலாளி மர்ம சாவு
x

சேலம் கிச்சிப்பாளையத்தில் தையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம் கிச்சிப்பாளையத்தில் தையல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தையல் தொழிலாளி

சேலம் அம்மாபேட்டை மாணிக்கவாசகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி. இவர்களுக்கு கணேசன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணேசன் வேலை செய்து வருகிறார். மகள் காயத்ரிக்கு திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கிச்சிப்பாளையம் அடுத்த பச்சப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வருவதாக செல்வராஜ் தனது மனைவி யிடம் கூறிவிட்டு சைக்கிளில் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காந்திமதி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை.

மர்மசாவு

இதனிடையே, பச்சப்பட்டி பகுதியில் செல்வராஜ் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து இருப்பதாக காந்திமதிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் தனது உறவினர்களுடன் அங்கு சென்றுபார்த்தபோது, செல்வராஜ் மயங்கியநிலையில் கீழே கிடந்தார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செல்வராஜின் முதுகில் கத்தியால் குத்தப்பட்ட காயம் உள்ளதாக கூறப்படுகிறது.

மதுபோதையில்...

இது ஒருபுறம் இருக்க, கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பகுதியில் சந்துக்கடையில் மது விற்பனை நடந்து வருவதாகவும், இதனால் அவர் நேற்று இரவு மது வாங்குவதற்காக அங்கு சைக்கிளில் சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு செல்வராஜ் மது வாங்கி அருந்திவிட்டு வரும்போது, சிலருடன் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, மதுபோதையில் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் செல்வராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகார் கூறினர். எனவே, அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே அவர் எப்படி இறந்தார்? என்பதற்கான விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story