உசிலம்பட்டி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற கட்டிட தொழிலாளி மர்ம சாவு - போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் புகார்
எழுமலை அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
உசிலம்பட்டி
எழுமலை அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
கட்டிட தொழிலாளி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேடன்(வயது 29). இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவருமே கட்டிட தொழிலாளர்கள். நேற்றுமுன்தினம் திரைப்படம் பார்க்க இரவு காட்சிக்கு எம்.கல்லுப்பட்டிக்கு வேடன் சென்றார்.
பின்னர் இரவு காட்சி முடிந்து நள்ளிரவு 1 மணியளவில் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இரவே அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மர்ம சாவு
வீட்டிற்கு சென்று தூங்கிய வேடன் காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எம்.கல்லுப்பட்டி போலீசார் அங்கு சென்று வேடனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில் தாக்கி இருக்கலாம் எனவும், அதில் வேடன் இறந்திருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் புகார் கூறினர்.
ேமலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து வேடனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
"போலீஸ் நிலையத்தில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை"- போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
உசிலம்பட்டி சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வெளிப்படைத் தன்மையை கருத்தில் கொண்டு பிரேதபரிசோதனை செய்வதை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தடயவியல் துறை தலைவர் மற்றும் தடயவியல்துறை மருத்துவர் கொண்ட குழு மூலம் பிரேத பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினர் மூலமாக, பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பு இறந்தவரின் உடலில் எந்த வித வெளிக்காயங்களும் இல்லை என்பதை காண்பித்து அதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. முதற்கட்ட அறிக்கையில், இருதய கோளாறு காரணமாக இறப்பு நேரிட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக மருத்துவ குழுவினரின் இறுதி அறிக்கை பெற வேண்டியுள்ளது. காவல்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் காவல்நிலையத்தில் போலீசாரால் எவ்வித தாக்குதலும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.