முந்திரி மரங்களில் மர்ம நோய் தாக்குதல்
திருக்கடையூர் அருகே முந்திரி மரங்களை மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே முந்திரி மரங்களை மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முந்திரி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கனோடை, டி.மணல்மேடு, கிடங்கல் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இப்பகுதியில் முந்திரி விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் உள்ள முந்திரி தோப்புகள் கடந்த மழைக்காலங்களில் வீசிய காற்றினால் கடுமையாக பாதிப்படைந்தன. மேலும் முந்திரி மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் முந்திரி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
மர்ம நோய் தாக்குதல்
இதைத்தொடர்ந்து சேதமடைந்த மரங்களை விவசாயிகள் பராமரித்து உரங்கள் இட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது முந்திரி மரங்கள் நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்கி வந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் உள்ள முந்திரி மரங்களில் மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனால் முந்திரி மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் கருகி உதிர்ந்து விடுகிறது. இந்த மர்ம நோய் தாக்குதலால் முந்திரி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள முந்திரி மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முந்திரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.