பஸ் டிரைவரை தாக்கிய மர்ம கும்பல்
ஆலங்குடி அருகே பஸ் டிரைவரை தாக்கிய மர்ம கும்பல் செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.
ஆலங்குடி அருகே உள்ள கம்மங்காட்டையை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 45). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி சாலையில் உள்ள பாச்சிக்கோட்டைக்கு பஸ் புறப்பட்டு சென்றது. அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு சென்று உள்ளார். இதனைப்பார்த்த கண்டக்டர் மலையப்பன் அந்த வாலிபரை பஸ் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர் ஆலங்குடி வடகாடு முக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
இதையடுத்து அந்த பஸ் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் சென்ற போது 10 பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறினர். பின்னர் அந்த கும்பல் கண்டக்டர் மலையப்பனை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது பஸ்சில் குறைவான பயணிகள் இருந்ததால் மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மலையப்பன் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.