கோவில் உண்டியல்களை தூக்கி சென்ற மர்ம நபர்கள்
கோவில் உண்டியல்களை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.
திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை பரமசிவம் தெருவில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை அங்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவிலில் உள்ள பெரிய உண்டியல் மற்றும் சிறிய உண்டியலை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் தூக்கி சென்றுள்ளனர். மேலும் கருவறைக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ½ பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உண்டில்கள் கோவிலுக்கு எதிர் புறம் உள்ள ஒரு இடத்தில் கிடந்ததை பார்த்தனர். அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு கோவிலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.