திருச்செந்தூர் நாழிக்கிணறு அருகே கிடந்த மர்மபொருளால் பரபரப்பு... போலீசார் கைப்பற்றி சோதனை


திருச்செந்தூர் நாழிக்கிணறு அருகே கிடந்த மர்மபொருளால் பரபரப்பு... போலீசார் கைப்பற்றி சோதனை
x

போலீசார் விரைந்து வந்து நாழிக்கிணறு அருகே கிடந்த மர்மபொருளை கைப்பற்றி சோதனை செய்தனர்.

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடிவிட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாழிக்கிணற்றில் நீராடிவிட்டு வெளியே வந்த போது, அங்கு சந்தேகப்படும் வகையில் வெடிகுண்டு போல் தோற்றமளிக்கும் மர்மபொருள் கிடந்ததைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து அந்த மர்மபொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். அது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், மிக கவனமாக போலீசார் அதை அப்புறப்படுத்தினர்.

அதே சமயம், அந்த மர்மபொருளானது கடந்த வாரம் கோவிலில் நடைபெற்ற சப்பர பவனி விழாவின் போது போடப்பட்ட வெடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட பொருள் வெடிகுண்டா, அல்லது வேறேதும் மர்ம பொருளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story