தடுப்பணை மதகை உடைத்த மர்ம நபர்கள்
நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள செட்டேரி தடுப்பணை மதகை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறி வீணானது.
தடுப்பணை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் 868 ஏக்கர் பரப்பளவில் செட்டேரி தடுப்பணை கட்டப்பட்டது. 46 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அணைக்கு தமிழக, ஆந்திர காட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால் ஆந்திர அரசு பல்வேறு தடுப்பணைகள் கட்டியதால் தண்ணீர் வரத்து குறைந்து 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் லேசான மலையின் காரணமாக இந்த செட்டேரி தடுப்பணை நிரம்பியது.
மதகு உடைப்பு
இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு செட்டேரி தடுப்பணையின் மதகை உடைத்து உள்ளனர். இதனால் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகியது. இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உடனடியாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் பொதுப்பணி துறையினர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து உடைந்த மதகை சரிசெய்தனர். மதகை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.