கவரிங் நகைகளை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்கள்
அணைக்கட்டு அருகே நடந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கவரிங் நகைகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
நகை திருட்டு
அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து 4 வீடுகளில் தொடர்திருட்டு நடைபெற்றது. அப்போது பாஸ்கரன் என்பது வீட்டில் மட்டும் 42 பவுன் நகை, பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களும் திருட்டு போனதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மூலைகேட் அருகே உள்ள ஒரு கிணற்று கரையில் நகைகள் மற்றும் நகை வைக்கும் பெட்டிகள் சிதறி கிடைப்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த நகைகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கவரிங் நகை
அதில் அங்கு கிடந்த ஆரம், நெக்லஸ், மூன்று ஜோடி கம்மல் உள்ளிட்ட நகைகள் போலி நகை என்பது தெரியவந்தது. மேலும் பாஸ்கரன் கொடுத்த புகாரில் 42 பவுன் நகை திருட்டு போனதாக கூறியிருந்ததில் 10 பவுனுக்கும் மேற்பட்ட நகை கவரிங் நகையாகவே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்ரு செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் பாஸ்கரன் வீட்டில் கவரிங் நகைகளோடு தங்க நகைகளும் வைக்கப்பட்டு இருந்தது தெரியாமல் 42 பவுன் திருட்டு போனதாக கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பாஸ்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.