சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாயமான பொய்மான் கரடு மறைந்து வரும் அதிசய காட்சி பாதுகாக்கப்படுமா?


சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  மாயமான பொய்மான் கரடு  மறைந்து வரும் அதிசய காட்சி பாதுகாக்கப்படுமா?
x

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொய்மான் கரடு பகுதியில் தோன்றும் அதிசய காட்சி மாயமாகி உள்ளது. மறைந்து வரும் அதிசய காட்சியை பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி, அக்.14-

பொய்மான் கரடு

பொய்மான் கரடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது எழுத்தாளர் கல்கி எழுதிய சிறுகதை தான். அதையும் தாண்டி சிலருக்கு பொய்மான் கரடு என்ற சுற்றுலா தலம் நினைவுக்கு வரும். அதற்கு காரணம் பொய்மான் கரடு பகுதியில் அமைய பெற்ற இயற்கை காட்சி தான்.

பொய்மான் கரடு என்பது சேலம் மாநகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு அருகே அமைந்துள்ள ஒரு இடமாகும். இங்குள்ள சமவெளி பகுதியில் தார் சாலையில் நின்று மேற்கு நோக்கி பார்த்தால் மலைத்தொடரில் இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள ஒரு குகையில் பாறை பிளவில் மான் ஒன்று இரு கொம்புகளுடன் நிற்பது போன்ற தோற்றத்தை காண முடியும்.

இந்த மலைத்தொடர் குகைக்கு அருகில் சென்று பார்த்தால் மான் எதுவும் இருக்காது. இது ஒரு மாய தோற்றமாகும். அதனால் இந்த கரடு பகுதி 'பொய்மான் கரடு' என்று அழைக்கப்படுகிறது.

ராமாயணத்தில் இடம்பெற்றது

பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் பொய்மான் கரடு இடம் பெற்றுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராமனையும், சீதையையும் பிரிக்கும் எண்ணத்துடன் மானாக உருமாறி வந்தான் மாரீசன். அந்த மானை கண்டு சீதை அதை பிடித்து தர ராமனை வேண்டினாள். அவளின் ஆசையை நிறைவேற்ற அந்த மானை ராமன் விரட்டி சென்ற பிறகு மாரீசன் என்று உணர்ந்த ராமன் மானுக்கு இந்த கரட்டில் மோட்சம் அளித்ததாக ஒரு கதை இங்கு உண்டு.

ஆரம்ப காலத்தில், சுற்றுலா பயணிகள், பொய் மானை காணும் வகையில், தார் சாலை ஓரம் அறிவிப்பு பலகை வைத்து, 'வியூ பாய்ண்ட்' அமைக்கப்பட்டிருந்தது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்கு நின்று பொய் மானை பார்த்து ரசித்து சென்றனர்.

மறைந்து வருகிறது

தற்போது சேலம்-நாமக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின், பொய்மான் பற்றி அறிவிப்பு பலகை மற்றும் 'வியூ பாய்ண்ட்' அமைக்கப்படவில்லை. பொய் மான் தெரியும் பாறையின் கீழ், பொதுமக்கள் சார்பில், ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.

பொய்மான் பற்றி அறிந்த பலர், சேலத்துக்கு வரும் போது எங்கு நின்று, பொய் மானை காண்பது என தெரியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனால், பொய் மான் என்ற இயற்கையால் உருவான மாயமான் காட்சி மெல்ல மெல்ல மறைந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், பொய் மான் பற்றிய அறிவிப்பு பலகை வைத்து 'வியூ பாய்ண்ட்' அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வருங்கால சந்ததிக்கு மறைக்கப்படும் காட்சி-பொதுமக்கள் ஆதங்கம்

பொய்மான் கரடு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகளை காண்போம்.

பொய்மான் கரடு பகுதியில் வசித்து வரும் தெய்வானை கூறியதாவது:-

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பல்வேறு ஊர் மக்களும் இந்த பகுதியில் நின்று பொய்மான் கரட்டில் தெரியும் மாயமானை ரசித்து செல்வார்கள். தற்போது அந்த இடத்தை மறைக்கும் வகையில் பெரிய அளவில் மரங்கள் வளர்ந்துள்ளதால் சாலையோரம் நின்று பார்த்தாலும் பொய் மான் தெரிவதில்லை. எனவே அந்த பகுதியில் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பனமரத்துப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:-

நாங்கள் சிறுவயதில் இருந்த காலத்தில் எங்களது பெற்றோர்கள் ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்போது இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தி பொய்மான் கரட்டில் தெரியும் பொய் மானை காண்பிப்பார்கள். அப்போது இருந்தே எங்களுக்கு இது மிகவும் அதிசயமான ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். ஆனால் தற்போது அந்த இடம் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு இங்கு இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்பதே தெரியாமல் போய் வருகிறது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது பொய்மானை காண்பதற்காக இங்கு அமைக்கப்பட்டு இருந்த வியூ பாயிண்ட் பலகையை அகற்றினார்கள். ஆனால் தற்போது வரை அந்த 'வியூ பாயிண்ட்' பலகை திரும்ப அமைக்கவில்லை. எனவே இந்த இடத்தில் மீண்டும் அந்த 'வியூ பாயிண்ட்' அமைத்து வருங்கால சந்ததியினருக்கு இந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் வரலாற்றுடன் கூடிய தகவல் பலகையும் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story