மார்த்தாண்டம் பட்டறையில் இருந்து37 பவுன் நகையுடன் மாயமான தொழிலாளி 1½ ஆண்டுக்கு பிறகு கைது
மார்த்தாண்டத்தில் நகை பட்டறையில் இருந்து 37 பவுன் நகைகளுடன் தலைமறைவான மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளிைய 1½ ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். அவர் நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் நகை பட்டறையில் இருந்து 37 பவுன் நகைகளுடன் தலைமறைவான மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளிைய 1½ ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். அவர் நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நகையுடன் தொழிலாளர்கள் மாயம்
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது43). இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். ஜுவல்லரிகளில் இருந்து நகைகள் ஆர்டர் பெற்று தனது பட்டறையில் வைத்து செய்து அவற்றை ஜுவல்லரிகளுக்கு வழங்கி வருகிறார். இங்கு மேற்கு வங்காளம், மெர்த்தலா பகுதியை சேர்ந்த அடல்தாஸ் என்ற சுஜய் (32), அமல்பஸ்வான் (30) ஆகிய 2 பேர் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மனோஜ் அந்த தொழிலாளிகளிடம் 37 பவுன் தங்க நகைகளை கொடுத்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகை கடையில் கொடுப்பதற்காக அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் 2 பேரும் ஜூவல்லரியில் கொடுக்காமல் அந்த நகைகளுடன் தலை மறைவாகிவிட்டனர்.
1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது
இதுகுறித்து மனோஜ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான 2 தொழிலாளர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அடல்தஸ் என்ற சுஜய் மேற்குவங்காளம் மெர்த்தலாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அடல்தாசை கைது செய்து மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 'நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்தேன்' என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அமல் பஸ்வானை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.