நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்
மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவடைவதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவடைவதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
சீரமைப்பு பணிகள்
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி நாகை மாவட்டத்தில் ஆயிரம் விசைப்படகுகள் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
மீன்பிடி தடைக்காலத்தை மீனவர்கள் படகுகளை பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட மராமத்து பணிகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர்.
இன்று நிறைவு
இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல நாகை விசைப்படகும் மீனவர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இதையொட்டி ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றும் பணியில் நேற்று நாகை பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.