நாகை, மயிலாடுதுறை மாவட்ட திட்டக்குழு கூட்டம்


நாகை, மயிலாடுதுறை மாவட்ட திட்டக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை, மயிலாடுதுறை மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் நடந்தது.

நாகப்பட்டினம்


நாகை, மயிலாடுதுறை மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் நடந்தது.

மாவட்ட திட்டக்குழு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித்துறையின் படி அனைத்து மாவட்ட திட்டக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன்படி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை இணைத்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இத்திட்ட குழுவிற்கு நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 பேரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஊராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட திட்ட குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.

வளர்ச்சி பணிகள்

இந்த மாவட்ட திட்டக்குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களை சேகரித்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல்.

ஊரக, நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள், சார்புத்துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் உள்ளிட்டவை இந்த திட்டக்குழுவின் பணிகள் ஆகும்.

முதல் கூட்டம்

அதன்படி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நேற்று நாகையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எம்.பி.க்கள். செல்வராஜ், ராமலிங்கம், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story