மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல் பாளையத்தைச் சேர்ந்த மாரப்பன் மனைவி சிவகாமி(வயது65). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் பால் கறந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் இவரிடம் பேச்சு கொடுத்தார். பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத சமயத்தில் இவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை வாலிபர் பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட சிவகாமி கழுத்துடன் சேர்த்து சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மூதாட்டியை தாக்கி விட்டு சங்கிலியை மீண்டும் பிடித்து இழுத்த போது அது அறுந்தது. 1 பகுதி தங்கச் சங்கிலி மூதாட்டி கையிலும் மற்றொரு பகுதி தங்க சங்கிலி வாலிபரிடமும் கிக்கியது. இதையடுத்து அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் வெளியே ஓடி தயாராக மோட்டார் சைக்கிளில் காத்திருந்த அவரது நண்பருடன் தப்பிச்சென்றார். மர்ம ஆசாமி தாக்கியதில் காயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதனை கைப்பற்றி பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.