நாகை-விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாகை- விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி,:
4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாகை- விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை பணிகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் சாலை விபத்துகளும் நடந்து வருகிறது.
பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்தவும், புதிய சாலைகள் அமைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நாகை- விழுப்புரம் இடையே ரூ.6,341 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் விழுப்புரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
190 கி.மீ. தூரம்
இந்த பணிகள் நாகை மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 190 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 180 கி.மீ. சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலை நாகை- சட்டநாதபுரம், சட்டநாதபுரம் - பூண்டியாங்குப்பம், பூண்டியாங்குப்பம் -புதுச்சேரி, புதுச்சேரி - விழுப்புரம் என 4 பகுதிகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டு பணகள் நடந்து வருகிறது.
50-க்கும் மேற்பட்ட பாலங்கள்
இந்த சாலையானது நாகையில் இருந்து காரைக்கால், சிதம்பரம், அன்னவல்லி, ராமாபுரம், தோட்டப்பட்டு, தென்னல், கொங்கராம்பாளையம், வளவனூர் வழியாக விழுப்புரத்தை சென்றடைகிறது.
காரைக்கால், திருக்கடையூர், புவனகிரி, கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் சிறு மற்றும் பெரியது என 50-க்கும் மேற்பட்ட பாலங்களும், 10-க்கும் மேற்பட்ட ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது.
ஆமை வேகத்தில் நடக்கும் பணிகள்
பெரும்பாலான பாலங்கள் முழுமையாக கட்டி முடிக்காமலேயே உள்ளன. 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை இந்த ஆண்டு முடித்திருக்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்துவது, மண் எடுப்பது உள்ளிட்டவை காரணமாக குறித்த நேரத்தில் பணிகள் முடியவில்லை.
ஆமை வேகத்தில் நடந்து வரும் நாகை- விழுப்புரம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.