நாகர்கோவில் மாநகராட்சி துப்புரவு ஊழியர் உள்பட 2 பேர் கைது
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமத்தில் உள்ள ஓட்டல், டீக்கடையில் பணம் கொள்ளையடித்தது தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி துப்புரவு ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை
அஞ்சுகிராமம் தெற்கு பஜாரில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த ஓட்டலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் மைக்கேல் ராஜ் (வயது 48) அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதேபோல் அந்த பகுதியில் உள்ள நாகராஜன் (43) என்பவர் நடத்தி வந்த டீக்கடையிலும் பணம், சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இந்தநிலையில் ஓட்டல், டீக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஒழுகினசேரி பறக்கின்கால் பகுதியை சேர்ந்த விமல் (28), நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.39 ஆயிரமும், டீக்கடையில் திருட்டு போன ரூ.8 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பொருட்களும் மீட்கப்பட்டன.
இதில் விமல் நாகர்கோவில் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராகவும், பேச்சிமுத்து தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் பணியிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் சமீபத்தில் அஞ்சுகிராமத்தில் தங்கியிருந்த போது நட்பு ஏற்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.