நாகூர் வெட்டாறு பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு நாகூர் வெட்டாறு பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கந்தூரி விழா தொடங்குவதற்கு முன்பு நாகூர் வெட்டாறு பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெட்டாறு பாலம் பராமரிப்பு
நாகை மாவட்டம் நாகூரில் வெட்டாறு பாலம் உள்ளது. காரைக்காலில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வந்தன. மேலும் தூத்துக்குடி- சென்னை மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக சென்று வந்தன. பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. பாலத்தில் உள்ள 16 இணைப்புகள் சரி செய்யும் பணி, பக்கவாட்டு கான்கிரீட் பாலத்தை உயர்த்தும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
இதனால் அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் இருந்து நாகூர் நகர சாலை வழியாக நாகைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவுக்குள் முடிக்க வேண்டும்
பின்னர் நாகை புத்தூர் ரவுண்டானா, வேளாங்கண்ணி, திருவாரூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் திருவாரூர் செல்ல வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து திட்டச்சேரி சாலை வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் புனரமைப்பு பணி நடைபெறும் வெட்டாறு பாலத்திற்கு முன்பு கங்களாஞ்சேரி சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளது.
அதேபோல வேளாங்கண்ணியில் இருந்து காரைக்கால் செல்லும் வாகனங்கள் புத்தூர் ரவுண்டானா வந்து, அங்கிருந்து தெத்தி சாலை வழியாக இடதுபுறம் பிரியும் மாநில நெடுஞ்சாலை வழியாக நாகூருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து காரைக்கால் செல்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆமை வேகத்தில் நடக்கும் பணி
இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களாக பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது.
இந்த விழாவில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நாகூருக்கு வருவார்கள். இதனால் நாகூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு வெட்டாறு பால பராமரிப்பு பணிகளை கந்தூரி விழாவுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு தடை
இதுகுறித்து கனரக வாகன டிரைவர் கார்த்திக் கூறுகையில், தூத்துக்குடியில் இருந்து ரேஷன் உள்ளிட்ட பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாதத்திற்கு 4 முறை சென்னைக்கு சென்று வருகிறேன்.
நாகூர் வெட்டாற்று பாலத்தில் வேலை நடந்து வருவதால் பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரைந்து முடிக்க வேண்டும்
இதற்கு மாற்றாக கங்களாஞ்சேரி கிராமத்துக்குள் சென்று மீண்டும் கிழக்கு கடற்கரை சாலை வருவதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. அலுவலக வேலை நேரங்களில் குறுகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்போது லாரிகளால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபடுகின்றனர். எனவே எங்களைப் போன்ற கனரக வாகன டிரைவர்கள் நிலையை கருத்தில் கொண்டு வெட்டாறு பாலம் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.