விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டி வழிபாடு


விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டி வழிபாடு
x

விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டி வழிபாடு

தஞ்சாவூர்

தமிழ் புத்தாண்டையொட்டி விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டி வழிபாடு செய்த விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர்.

நல்லேர் பூட்டும் விழா

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டும் விழா தமிழகத்தில் பல கிராமங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர் பண்பாட்டில் சித்திரை முதல் நாளில் விவசாயப் பணிகளைத் தொடங்குவது நல்லதாகவும், மரபாகவும் உள்ளது.

அதை நல்லேர் அல்லது பொன் ஏர் பூட்டும் விழாவாக கிராமங்களில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி நல்லேர் என்னும் பொன்னேர் பூட்டும் நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் அந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் காலப்போக்கில் விவசாயம் பொய்த்து போனதாலும், எந்திரமயமானதாலும் நல்லேர் பூட்டும் நிகழ்வு பல கிராமங்களில் மறைந்துவிட்டாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் வழிபாடு

இந்தநிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று தஞ்சை மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு, பள்ளியக்ரஹாரம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நல்லேர் பூட்டி, நடப்பு ஆண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்ககூடாது என விவசாயிகள் இறைவனை வழிபட்டனர்.

முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை படையலிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் ஏர் பூட்டி உழவு பணியை தொடங்கினர். இந்த நல்லேர் பூட்டும் நிகழ்வு டெல்டா மாவட்டங்களில் நேற்று தொடங்கி சித்திரை மாதத்தில் சுப தினங்களில் ஒவ்வொரு கிராமங்களில் நடைபெற உள்ளது.

மகசூல் அதிகரிக்கும்

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, குறுவை, சம்பா சாகுபடிகள் முடிந்ததும், கோடை காலத்தில் வயல்களில் எந்த சாகுபடி பணியையும் மேற்கொள்ளாமல் வயலை அப்படியே ஓரிரு மாதங்களுக்கு விட்டுவிடுவார்கள்.

பின்னர், தமிழர்களின் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் பிறந்ததும், நல்ல நாள் பார்த்து அந்த வயலில், நல்லேர் பூட்டி பணியைத் தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் அந்த ஆண்டு சாகுபடியில் எவ்வித இடையூறும் இல்லாமல், மகசூல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும் என்றனர்.


Next Story