நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கின
நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்து, அங்கு சிக்கிய முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்து, அங்கு சிக்கிய முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் காப்பாளர்களிடம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
மேலும் அரசு விடுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைக்காக ஒதுக்கப்படும் பணத்தை செலவு செய்வதில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், வார்டன்கள் பல்வேறு முறைகேடு செய்ய அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது அங்கு பணியாற்றி வரும் தனி தாசில்தார் மாதேஸ்வரி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:- புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தினோம். அதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.