அணைப்பாளையம் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு


அணைப்பாளையம் ஊராட்சியில்  தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்  பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அணைப்பாளையம் ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

நாமக்கல்

அணைப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2-வது வார்டு பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊராட்சியில் 1 மற்றும் 2-வது வார்டுகளில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வருகின்றோம். எங்கள் பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. அதற்கு அணைப்பாளையம் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வினியோகம் செய்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையில் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஆழ்துளை கிணறுகள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. அவற்றை இதுவரை சரி செய்யவில்லை.

தடையின்றி குடிநீர்

அதனால் ஒரு மாதமாக தண்ணீர் இன்றி நாங்கள் கடும் அவதிப்படுகிறோம். எங்கள் பகுதியில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கால்நடைகள் மற்றும் விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வேறு வழியின்றி ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, வண்டியில் வரும் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

எங்கள் கிராமம் வழியாக மோகனூரில் இருந்து அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு காவிரி குடிநீர் செல்லும் பைப்லைன் செல்கிறது. அந்த பைப்- லைனின் இருந்து நீரை பிரித்து, எங்கள் பகுதியில் உள்ள நிலத்தொட்டியில் விட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றி தண்ணீர் வினியோகம் செய்தால், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். எனவே எங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story