விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால்  நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நாமக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

நஷ்டஈடு

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா தோளூர்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 56). கோவில் பூசாரி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சேலம் கோட்ட அரசு பஸ் மோதியதில் இறந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பரமசிவம் இறப்பிற்கு நஷ்டஈடு கேட்டு அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகள்கள் அகிலாண்டேஸ்வரி, அன்னக்கிளி, மகன்கள் விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

தனலட்சுமி தரப்பில் வக்கீல் நேதாஜி கவியரசு வாதாடி வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ரூ.2.20 லட்சத்தை பரமசிவம் குடும்பத்துக்கு சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அரசு பஸ் ஜப்தி

ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈட்டு தொகையை விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கவில்லை. அதனால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் நஷ்டஈடு வழங்காததால் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து காரவள்ளிக்கு செல்ல தயாராக இருந்த சேலம் கோட்ட அரசு டவுன் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் நாமக்கல் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story