முக்கிய சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்


முக்கிய சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்
x

குடியாத்தத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு தலைவர்களின் பெயர் வைக்க நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்்றப்பட்டது.

வேலூர்

நகரமன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பெ.சிசில்தாமஸ், நகராட்சி மேலாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர்களின் பெயர்

கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் குடியாத்தம்-வேலூர் சாலையில் நகராட்சி எல்லைக்குள் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவு வளைவு அமைத்திட வேண்டும், குடியாத்தம்-மேல்பட்டி சாலைக்கு சுதந்திரபோராட்ட தியாகி அண்ணல்தங்கோ பெயரும், அண்ணாசிலை முதல் சந்தைப்பேட்டை வரை பேரறிஞர் அண்ணா சாலை என்ற பெயரும், பெரியார் சிலை முதல் புதிய பஸ்நிலையம் வரை பெரியார் சாலை எனவும் பெயர் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளின் குறைகள் குறித்து பேசியதாவது:-

நிதி ஒதுக்கவில்லை

ஜி.எஸ்.அரசு-ராபின்சன் குளக்கரை பகுதியில் பழுதடைந்துள்ள வணிக வளாகத்தை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும்.

கன்னிகாபரமேஸ்வரி சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

ஆட்டோமோகன்:- குடியாத்தம் பகுதியில் நாய்களை பிடிக்க வேண்டும். வார்டுகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் பொது நிதியிலிருந்து அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

நவீன்சங்கர்:- கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அதிக அளவு மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவிகள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும். மழைக்காலங்களில் 3-வது வார்டு நேதாஜி இரண்டாவது சந்திப்பதில் 3 அடி அளவிற்கு கழிவு நீருடன் தண்ணீர் தேங்கி வருகிறது. கால்வாய்களை தூர்வார வேண்டும். இறைச்சி கழிவுகளை கால்வாயில் கொட்டுவதை தடுக்க கோழி இறைச்சி கடைக்காரர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

ஹஸீனா:- கூடநகரம் சாலை,சந்தப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

முஷிராபேகம:- ரம்ஜான் மாதத்தில் எங்கள் பகுதிகளில் தூய்மைப்பணியை அதிகரிக்க வேண்டும். மசூதி உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் சேராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகநாதன்:- கொண்டசமுத்திரம் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விளம்பர பதாகை வைக்க சிறப்பு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

சிட்டிபாபு:-ஒகேனக்கல் குடிநீர் 5 அல்லது 6 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோஜ்-எனது வார்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சீர் செய்ய வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

ரூ.13 கோடியில் பணிகள்

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தலைவர் சவுந்தரராஜன் ''சுண்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும், ரூ.13 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தினந்தோறும் தண்ணீர் கிடைக்கும், ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுகிறவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


Next Story