ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா தொடங்கியது
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ந் தேதி 9 பெருமாள்களின் கருடசேவை நடக்கிறது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ந் தேதி 9 பெருமாள்களின் கருடசேவை நடக்கிறது.
அவதார திருவிழா
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைக்கு பிறகு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இரவில் நம்மாழ்வார் வீதியுலா நடந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் நம்மாழ்வார் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
கருடசேவை
வருகிற 7-ந் தேதி 5-ம் திருவிழா அன்று காலை, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள், தொலைவில்லி மங்களம் அரவிந்தலோசனர், இரட்டைத்திருப்பதி தேவர் பிரான், பெருங்குளம் ஸ்ரீமாயக்கூத்தப் பெருமாள், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ண பெருமாள், திருக்கோளூர் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் ஆகியோரை வரவேற்று மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு நம்மாழ்வார் வீதி உலாவும், இரவில் 9 பெருமாள்களின் கருடசேவையும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்கப்பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டம்
வருகிற 11-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறும். 10-ம் திருநாளன்று தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.