லாரிகளை சிறைபிடித்து நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்


லாரிகளை சிறைபிடித்து நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்
x

லாரிகளை சிறைபிடித்து நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே குவாரியில் இருந்து மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி்

கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து எடுக்கப்படும் மணல் பாலூரன்படுகை, குன்னம் ஆகிய இரண்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள யார்டில் சேமித்து வைக்கப்பட்டு ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு விடுமுறை தினமான நேற்று மணல் குவாரி இயக்கப்பட்டது. இங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறைபிடித்து போராட்டம்

இதையடுத்து புத்தூர் மதுகடி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசு விடுமுறை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலை மீறி இயக்கப்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story